விநாயகபுரம் கருப்பசாமி வரலாறு
அருள்மிகு விநாயகபுரம் கருப்ப ஸ்வாமி அருள்வாக்கு சித்தர் வம்சத்திற்கு அருளிய வரலாறு
முற்காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களின் ஒருவரான விக்கிரம பாண்டியன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவர் ஆட்சியில் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மக்களை நல்லாட்சி செய்து நற்குணம் கொண்ட அரசன் இகபரசுகம் - சிற்றின்பத்தில் அதிகமாக மோகம் கொண்ட காரணத்தால் தன் உடல் காம பசிக்காக அரசன் அளவுகடந்த தீமைகளை செய்து வந்தான். அரசனுடைய காமபசி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்நாட்டில் இருக்கும் அனைத்து பெண்கயும் காம பசியால் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அரசனுடைய இந்த காமவெறி ஆனது முழு நேர பணியாக மாறிவிட்டது. நாட்டில் தன் ராஜ்யத்திற்கு உட்பட்ட எல்லா பெண்களுமே தமக்கு சொந்தம் என எண்ணி, ' நாடே எனக்கு சொந்தம் என்பதால் நாட்டில் உள்ள எல்லா பெண்களும் எனக்கு சொந்தம்' என்ற எண்ணம் வலுத்தது. பிறகு தன் நாட்டில் வயதுக்கு வரும் பெண்கள் தனக்கு சொந்தம் என எண்ணி நாட்டில் தண்டோரா போடும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார். அந்த நாட்டில் வயதுக்கு வரும் பெண்கள், "வெள்ளாமையில் விளைகின்ற நெல் மணிகளை அறுவடை செய்து ஆண்டவனுக்கு படையல் போடுவது போல" அந்த நாட்டில் பருவமடைந்து சமைக்கின்ற அத்தனை பெண்மணிகளும் அரசனுக்கு சமர்ப்பணம் செய்கின்ற நிலை உருவானது.
நிலையிலேயே காலங்கள் உருண்டோடின. அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட நமது சித்தர் அய்யாவின் முன்னோரான லக்ஷ்மி அம்மாள் வாழ்ந்து வந்தார். அருள்வாக்கு சித்தரின் பரம்பரையில் உதித்த - லக்ஷ்மி அம்மாளுக்கு தாய் மற்றும் உடன் பிறந்தோர் நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரர்களுக்கு ஒரே சகோதரி ஆவார். ஆறு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். காலங்கள் உருண்டோட சிறுமியாக இருந்த லக்ஷ்மி அம்மாள் பருவம் அடைகின்ற காலம் நெருங்கி கொண்டிருந்தது. ஒருநாள் லக்ஷ்மி அம்மாள் பருவம் அடைகிறாள். அவளுக்கு சடங்கு செய்ய ஊர் மக்கள், அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடினர். ஒன்றுகூடி சடங்கு செய்தார்கள். லக்ஷ்மி அம்மாள் பருவம் அடைந்து விட்டாள் என்ற செய்தி ஒற்றர்கள் மூலமாக அரண்மனைக்கு தெரிவிக்கப்பட்டது. சடங்கு முடிந்தது ஊரில் அக்கம்பக்கத்தினர் இருக்கும் பெண்கள் அனைவரும் அரசனைப் பற்றி கூறி லக்ஷ்மி அம்மாளை பயமுறுத்தி கொண்டிருந்தார்கள். லக்ஷ்மி அம்மாவிற்கும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று அனுதினமும் ஆண்டவனை தொழுது கொண்டிருந்தாள். லக்ஷ்மி அம்மாளுக்கு சடங்குகள் முடிந்து அரண்மனைக்கு அனுப்பி வைக்குமாறு அரசிடமிருந்து தூது வந்தது. செய்தியை கேட்ட குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். லக்ஷ்மி அம்மாவுக்கோ 'நான் வாழ்ந்தால் பத்தினியாக வாழ வேண்டும்' என்ற எண்ணத்தை வைராக்கியமாக மனதில் பதிய வைத்திருந்தாள்.
அன்றிலிருந்து லக்ஷ்மி அம்மாவிற்கும் சகோதரர்களுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.'என்னை அரண்மனைக்கு அனுப்பி வைத்தாள் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று லக்ஷ்மி அம்மா அவரது சகோதரர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தாள்.அவளது சகோதரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.வாழ்ந்தால் மானத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக ஊரை காலி செய்துவிட்டு சென்றுவிடலாம் என தீர்மானித்தார்கள். ஆனால் அவர்களுக்கு சோதனை காலம் போல் மழை காலமாக இருந்தது. பகலில் தப்பித்து செல்ல முடியாது. இரவு அடாத மழை பொழிந்து கொண்டிருந்தது. ஓரிரு நாட்கள் இப்படியே கடந்து கொண்டிருந்தன. "லட்சுமியை அழைக்க பல்லாக்கு வரும். அனுப்பி வையுங்கள்". என அரண்மனையிலிருந்து செய்தி வந்தது. இந்த செய்தியை கேட்ட லக்ஷ்மி அம்மாள் குடும்பத்தார் "ஒன்று லட்சுமியை அனுப்பி வைக்க வேண்டும் இல்லையேல் குடும்பத்துடன் மரணம் அடைய வேண்டும் - இல்லையேல் ஊரை விட்டு தப்பி செல்ல வேண்டும் என என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்கள். அனைவரும் ஒன்று கூடி, ' இன்று இரவே ஊரை காலி செய்து விட்டு சென்று விடலாம் என தீர்மானித்தார்கள். கதிரவன் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தார். இருள் சூழ ஆரம்பித்தது.லக்ஷ்மி அம்மா குடும்பத்தார்கள் பயமும் பதற்றத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி அம்மாள் குடும்பத்தார் தங்களது துணிமணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு ஊரை விட்டு காலி செய்ய தீர்மானித்து காத்துக் கொண்டிருந்தார்கள்.இரவு நடுநிசி அடங்கிவிட்டது. அடாத மழையால் என்ன செய்வதென்று தெரியாமல் ஊரை விட்டு காலி செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையில் இருள் சூழ்ந்த நிலையில் ஆறு பேரும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர்.ஊரை கடந்து வருகின்ற நேரத்தில் ஊர் காவலர்கள் ஒரு சிலர் கண்ணில் பட்டு விட்டனர். இந்த செய்தி வேகமாக பரவியது. அரசனுடைய காவலர்களுக்கு செய்தி எட்டியது. அவர்களை குடும்பத்துடன் பிடித்து வர அரசிடமிருந்து ஆணை வந்தது. தனது தலைக்கு மேல் கட்டி இருக்கிறது என்பதை உணராமல் 'ஊரை விட்டு தப்பித்து செல்ல வேண்டும்' என்ற எண்ணத்தில் ஒரு பக்கம் லக்ஷ்மி அம்மா குடும்பத்தார் இருளில் தட்டுத் தடுமாறி சென்றுகொண்டிருந்தார்கள். மறுபக்கம் லட்சுமி அம்மாவின் குடும்பத்தாரை கைது செய்துவிட வேண்டும் என அரசனுடைய ஆட்கள் தேடிக் கொண்டிருந்தனர்.
ஊரை கடந்து இறுதியாக ஊர் எல்லையில் இருக்கும் கம்மா கரையை வந்தடைந்தார்கள். கம்மாவை கண்ட அனைவருக்கும் பேர் அதிர்ச்சி தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடி கொண்டிருந்தது. ஆற்றை கடக்க முடியாமல் ஊருக்கு திரும்பி செல்லவும் முடியாமல் என்ன செய்வது என தவித்தார்கள். தப்பிக்க பரிசிலும் இல்லை. உதவி செய்ய ஆளும் இல்லை. இச்சூழ்நிலையில் லக்ஷ்மி அம்மா தனது குறுகிய சிந்தனையால் 'தன்னால் தானே தன் குடும்பத்தாரும் இந்த அவலநிலை என்று மனம் உடைந்து 'தான் இல்லாவிட்டால் தன் சகோதரர்களும் தன் குடும்பமும் கவலை இல்லாமல் வாழ்வார்கள்' என எண்ணினாள். உடனே அந்த இருள் சூழ்ந்த பகுதியில் தன் சகோதரர்களை விட்டு விலகி தனி வழியில் சென்று தான் எடுத்து வந்த உடுப்பில் ஒரு புடவையை எடுத்து அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுருக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தாள். அப்பொழுது சுருக்கு போட்ட புடவை அவிழ்ந்து விழுந்தது. மீண்டும் சுருக்கு போட அவிழ்ந்து விழுந்தது. அப்பொழுது ஒரு அசராரி குரல், "எதற்காக நீ சாக முயற்சிக்கிறாய்?" என்று கேட்டது. அக்குரலை பொருள்படுத்தாமல் லக்ஷ்மி அம்மாள் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தாள். அப்பொழுது "நில்! எதற்காக நீ தற்கொலைக்கு முயற்சிக்கிறாய்?" "என்னை கண்டு பயப்படாமல் பதில் சொல்" என்று அதட்டலாக கம்பீரமான குரல் கேட்டது. அதற்கு லக்ஷ்மி அம்மா என்னை அரசனுக்கு இரையாக எனக்கு ஆணை வந்தது. நான் வாழ்ந்தால் ஒருவனுக்காக வாழ வேண்டும் இல்லையேல் உயிரை விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊரை காலி செய்து விட்டு சென்று விடலாம் என வந்தோம். வந்த இடத்தில் கம்மாவை கடக்க முடியவில்லை - ஊருக்கு திரும்பி செல்லவும் முடியவில்லை. பொழுதும் விடியப் போகிறது. என்னால் என் குடும்பத்திற்கு ஒரு பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. என்னால் எல்லோரும் கஷ்டப்படுவதை விட நான் ஒருத்தி மாண்டாள் என் குடும்பமே கவலை இல்லாமல் வாழும் என்று கூறினாள். அதற்கு அந்த அசராரிகுரல், "உனக்கு என்ன செய்ய வேண்டும்" என கேட்டது. 'என்னால் என் குடும்பம் மாண்டுபோவதைவிட நான் மாண்டு போக வேண்டும். இல்லையேல் என் குடும்பத்துடன் இந்த ஊரை விட்டே செல்ல வேண்டும்" என்றாள். அதற்கு அந்த அசராரிகுரல். " நீ போய் கம்மாக் கரையில் நின்று உன் இஷ்ட தெய்வத்தை வேண்டி மனதார என்னை நினைத்து கூப்பிடு" என் குரல் ஒலித்தது. ஒரு விதத்தில் பயம் கலந்த குழப்பத்துடன் லக்ஷ்மி அம்மா தன் சகோதரர்களை தேடிப்பிடித்து கம்மா கரைக்கு அழைத்து சென்று மனதார வேண்டினாள். அப்பொழுது அங்கிருந்த ஒரு மரம் உடைந்து ஆற்றில் விழுந்தது. அப்பொழுது "மரத்தின் மீது ஏறி கொள்ளுங்கள்" என்று குரல் வந்தது.
அனைவரும் உற்சாகத்துடன் அந்த மரத்தின் மீது ஏறி கொண்டனர். அடுத்த வினாடியே கரைபுரண்டு ஓடிய கம்மா கரையை அனைவரும் அச்சம் இல்லாமல் கடந்து கரையை அடைந்தார்கள். நாட்டை விட்டு வெளியேறி விட்டோம் என்ற பெருமிதத்தில் திளைத்த லக்ஷ்மி அம்மாவிற்கு திடீரென ஒரு மூளை வேலை செய்தது. தாம் கரையை கடக்க காரணமாக இருந்த இம்மரத்தை மற்றவர்கள் பயன்படுத்தி தங்களை பிடிக்க வந்து விடுவார்கள் என்று பயந்து மீண்டும் தன் இஷ்ட தெய்வத்தை நினைத்து, " நானும் பத்தினி என் ஆத்தாளும் பத்தினி என்றால் வடபுறம் சாய்ந்த மரம் தென்புறம் தடயம் தெரியாமல் எழுந்து நிற்க வேண்டும்" என்று வேண்டினாள்.அதேபோல் மரமும் தடயம் தெரியாமல் தென்புறம் எழுந்து நின்றது. அத்தனை பேரும், "தப்பித்தோம் பிழைத்தோம்" என அளவு கடந்த சந்தோஷத்தில் பாதையை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது "நானும் வருகிறேன் நில்லுங்கள்!" என்று மீண்டும் அந்த அசராரிகுரல் ஒலித்தது. குரல் ஒலித்த உடன் அத்தனை பேரும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் ஓட்டமாக ஓடினார்கள். மீண்டும் அந்த குரல் கேட்டு கொண்டே இருந்தது ." நிற்கிறீர்களா இல்லையா ? " என்று அதட்டலாக அசரரிகுரல் வந்தது . அனைவரும் குரல் கேட்ட திசையில் திரும்பி பார்த்தார்கள் . ஒருவர் முகம் ஒருவர் பார்க்கின்ற பொழுது விடிந்த சூழ்நிலையில் தங்கள் கண்ணுக்கு எட்டிய வரையில் யாரும் தெரியவில்லை.ஆனாலும் குரல் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் எல்லோரும் "யார், யார்?" என்று சுற்றி முற்றும் பார்த்தனர். அவர்கள் அனைவருக்கும் ' நம்மை ராஜாவின் ஆட்கள் சுற்றி வளைத்து விட்டார்கள் என்ற பயம் ஏற்பட்டது. அனைவரும் சேர்ந்து," நீங்கள் யார்?" என்று உரக்க கேட்டார்கள். அப்பொழுது அந்த அசரரிகுரல் "நீங்கள் யாரும் என்னை கண்டு பயப்பட தேவையில்லை நான் தான் பதினெட்டாம் படியான்" என்று கூறியது. பதினெட்டாம் படியான் என்று கூறியது இந்நாட்டு அரசன் கேட்டுக் கொண்டதற்கிணங்க , நாட்டை காவல் காக்கும் பொருட்டு மலையாள மாந்தரீர்கள் மூலமாக என்னை வரவழைத்து , எனக்கு இஷ்டப்படையல் செய்து இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு நேரக் கூடாது என்பதற்காகவும் , அந்நியர்கள் படையெடுத்து நாட்டை சூரையாடக்கூடாது என்பதற்காகவும் , ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் , கம்மா கரை கரையை பிறளாமல் இருப்பதற்காகவும் , நாட்டு எல்லையில் என்னை காவலுக்கு நிறுத்தினார் . அரசன் என் மேல் வைத்த அளவு கடந்த பக்தியாலும் , நம்பிக்கையாலும் அரசன் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாட்டையும் , நாட்டு மக்களையும் நான் காவல் காத்துத் தருகிறேன் என்று அரசனுக்கு சத்திய வாக்கு கொடுத்தேன் . கொடுத்த வாக்கை இதுநாள் வரையில் வாக்கு மாறாமல் நிறைவேற்றி வந்தேன் . நீ ஒருத்தி கற்புநெறித் தவறாமல் வாழ வேண்டும் என எண்ணி , அதற்கு பங்கம் வந்த காரணத்தால் தான் தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி நான் குடியிருந்த மகுடமரத்தில் நீ தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததால் உன் கற்பு நெறியைப் பார்த்து உனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டேன் . இரண்டாவது இராஜனுக்கு உடையவளாகிய உன்னை நாட்டை விட்டு கடக்கவும் , உதவி செய்து விட்டேன் . இதனால் இராஜன் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் இராஜதுரோகம் செய்துவிட்டேன் நான் அங்கிருந்தால் இராஜன் கேள்விக்கு நான் தலை குனிந்து பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் அதனால் இனி நான் அங்கிருக்க விருப்பமில்லை . எனவே நானும் உங்களுடன் - வருகிறேன் . என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என கருப்பசாமி லக்ஷ்மி அம்மாளை பின் தொடர்ந்தது . இப்படியே ஆறுபேரும் நாட்டை விட்டு நாடு கடந்துவிட்டோம் என்று நாடோடியாக நடத்துச் சென்றார்கள் . இருக்க இடமுமில்லை , உண்ண உணவும் இல்லை . ஊர் ஊராகச் சென்று வேலைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள் . வேலை யாரும் தரவில்லை . பசிக்கு உணவும் தரவில்லை . பசியின் கொடுமையால் ஆறுபேரும் கொத்தடிமைபோல் ஆடுமாடு வளர்க்கும் பட்டித் தொழுவத்தில் ஒரு வேளை கேப்பைக் கூழுக்கு வேலைக்குச் சேர்ந்தார்கள் . ஒருவேளை உணவுக்காக ஆறுபேரும் அடிமைகாளக உழைத்தார்கள் . இப்படியே காலம் நகர்ந்தது . லக்ஷ்மி அம்மாவோ பருவப் பெண்ணாக வளர்ந்தாள் .உடுத்தவோ நல்ல ஆடையில்லை . தன் மானத்தை மறைக்க ஒவ்வொரு நாளும் போராடினார்கள் . ஒவ்வொரு நாளும் கிழிந்த ஆடையைத் தைத்துப் பயன்படுத்தினார்கள் . மானத்தை மறைக்க ஆடை இல்லை . வயிற்றை நிரப்ப உணவில்லை . உண்ண ஒரு வேளைக்கு மேல் உணவில்லை . இதை எண்ணி மீண்டும் லக்ஷ்மி அம்மாள் மனமுடைந்தாள் . தன் ஒருத்தி மானத்திற்காக குடும்பமே அடிமைப்போல் உழைத்தும் இந்த உலகத்தில் கஷ்டப்பட்டுத்தான் வாழ்கிறோம் ' என்ற மன உளைச்சலுக்கு ஆளாகினாள் . இனி நாம் உயிர் வாழ்ந்து நம் குடும்பத்தாரை கஷ்டப்படுத்தக்கூடாது என்று மீண்டும் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தாள் .
வழக்கம்போல் தன் சகோதரர்களுடன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு , மேற்குத் தொடர்ச்சி மலையில் மேய்த்துக் கொண்டிருந்தாள் . அப்பொழுது திடீரென்று லக்ஷ்மி அம்மாவிற்கு ' தான் இறந்துவிட்டால் தன் குடும்பத்தார் எங்கேயோ சென்று பிழைத்துக் கவலையில்லாமல் வாழ்வார்கள் ! என்று சிந்தித்து மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள் . அப்பொழுது லக்ஷ்மியின் கையை ஒரு கரம் பிடித்து இழுத்தது . " மீண்டும் சாகப் போகிறாயா ? " என்று கேட்டது . அதற்கு " அன்றே என்னை மரணம் அடைய விட்டிருந்தால் என் குடும்பத்திற்கு இவ்வளவு கஷ்டம் நேர்ந்திருக்காது . மீண்டும் என்னைக் காப்பாற்ற வேண்டாம் . நான் சாகிறேன் என்று லக்ஷ்மி அம்மாள் கூறினாள் . " நீ எதற்காக சாகிறாய் ? " என்று கருப்பசாமி கேட்டது . " நாங்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் உண்ண ஆகாரம் இல்லை . உடுத்த உடையில்லை . உரங்க இடமில்லை இப்படியொரு அவல நிலையில் நாங்கள் வாழ்வது உங்களுக்குத் தெரியாதா ? " என்று லக்ஷ்மி அம்மாள் கேட்டாள் . அதற்கு கருப்பசாமி " என்றாவது ஒரு நாளைக்கு நான் இருக்கிறேன் " என்ற எண்ணம் உனக்கு வந்திருக்கிறதா ? இல்லை நீயாவது " என்னைக் காப்பாற்றுங்கள் " என்று இதுவரை ஒரு நொடியாவது என்னை உன் மனதாரக் கேட்டதுண்டா ? " என்று கேட்டார் . அதற்கு லக்ஷ்மி அம்மா கண்ணீர் மல்க அழுதுக் கொண்டிருந்தாள் . ஆண்டவன் கருப்ப சாமியோ . சரி உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார் . நானும் என் குடும்பத்தாரும் பசி பட்டினியில்லாமல் வாழ வழி அமைத்துக் கொடுக்க வேண்டும் " என்று லக்ஷ்மி வேண்டினார் . அதற்கு கருப்பசாமி மலையிலிருந்து இறங்கி கீழே சென்று மனதார என்னைக் கூப்பிடு . நான் வழி காட்டுகிறேன் என்று கூறினார் . கருப்பன் சொன்ன வாக்கைக் கேட்டு லக்ஷ்மி தன் சகோதரர்களை அழைத்துக் கொண்டு மலை உச்சியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் , மனம் உருகி வேண்டினாள் , அப்போது அந்த இடம் இடிமின்னல் சப்தத்துடன் பெருத்த சத்தத்துடன் ஒரு மணி ஒன்று மலையிலிருந்து உருண்டு ஓடி வந்தது . அப்பொழுது " இந்த மணி பூமியில் படுவதற்குள் தாங்கிப் பிடித்துக் கொள் " என்று கட்டளையிட்டார் . அப்பொழுது உடனே மணி வேகமாக உருண்டு வருவதை கண்ட லக்ஷ்மி அம்மா தன் முந்தியில் மணியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு மணியை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார் . அப்பொழுது லக்ஷ்மி அம்மாவிற்கு பெரும் குழப்பம் " இந்த மணியை வைத்து நாம் என்ன செய்வது ? " என்று யோசித்துக் கொண்டிருந்தாள் . அப்போழுது கருப்பசாமி பலமாக சிரித்துவிட்டு , " இந்த மணிதான் உன் வாழ்வாதாரம் . இந்த மணியை உன் நான்கு சகோதரர்களில் யாரிடம் உனக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவரிடம் ஒப்படைத்துவிடு . அவர் கருப்புத் துணியால் மார்புகச்சை அணிந்து கொண்டு இந்த சலங்கையை இடுப்பில் கட்டிக் கொள்ளச் சொல் . பிறகு நடப்பதை நீயே அறிவாய் " என்று கருப்பசாமி கூறி மறைந்தது . பிறகோ கருப்புத்துணி இல்லாமல் லக்ஷ்மி அம்மாவுடைய தாவணியை எடுத்து வலது மார்பில் அணிவித்து , ஆண்டவன் கொடுத்த சலங்கையை கற்றாழை நார் கொண்டு சகோதரன் இடுப்பில் சலங்கையை கட்டிவிட்டாள் . அடுத்த கணமே சகோதரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து பலபேர் சேர்ந்து அடக்கியும் அடக்க முடியாமல் ஆவேசமாய் அவனுள் வந்த கருப்பன் மருளாடத் தொடங்கினார் . சகோதரன் நிலை கண்டு லக்ஷ்மி அம்மா ஓடிப்போய் கருப்பன் காலைப்பிடித்தாள் . காலில் விழுந்து ' எங்களை காப்பாற்றுங்கள் என்று மன்றாடினாள் . அப்போது ' நான்தான் பதினெட்டாம்படி கருப்பன் - உன் மானத்தைக் காப்பாற்ற மனம் இறங்கி வந்தவன் நான் உனக்கு என்ன வேண்டும் கேள் " என்று கருப்பசாமி ஆவேசமாகக் கேட்க , அதற்கு லக்ஷ்மிஅம்மா " நானும் என் குடும்பத்தாரும் பசி பட்டினி இல்லாமல் வாழவேண்டும் . அனுதினமும் பலபேருக்கு பசியைப் போக்க வேண்டும் " என்று வரம் கேட்டாள் . அதற்கு கருப்பர் கேட்ட வரத்தை தருகிறேன் . அப்படித் தந்தாள் நீ எனக்கு என்னத்தருவாய் ? " என்று கருப்பசாமி கேட்டார் . அதற்கு லக்ஷ்மிஅம்மா " எங்களிடம் கொடுப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை . வேண்டும் என்றால் எங்கள் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் " என்றாள் . அதற்கு கருப்பு பலமாகச் சிரித்துவிட்டு உங்கள் அனைவரின் உயிர் தேவையில்லை . உங்களை காக்க நான் இருக்கிறேன் . இந்த பூலோகத்தில் நான் வந்த நோக்கம் ஈரேழு உலகம் என்னால் படைக்கப்பட்ட முதல் எண்ணாயிரம் ஜீவஜந்துக்களையும் காக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளதால் அந்தப் பணியை நான் செய்ய உன் வம்சத்தில் பிறக்கும் தலைமகன்களை நான் ஆட்கொண்டு உலகமக்களை காக்க என் பணிகளுக்கு உன் வம்சத்தில் பிறக்கும் தலைமகன்களை எனக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் . உன் குடும்பத்து வம்சாவாரியாக நான் உடனிருந்து அத்தனை பேருக்கும் என் அருளையும் , என் அருள்வாக்கு தந்து குறைகளையும் தீர்த்து வைக்க போகிறேன் . என்னை நாடி வரும் மக்களுக்கு உத்தரவு சொல்லி உண்மை உரைக்க இருக்கப்போகிறேன் என அருள்வாக்கு வழங்கினார் . அப்படியே நாளுக்கு நாள் கருப்பனுடைய அருள்ஆட்சி துவங்கியது . நாள்தோறும் கருப்பனுடைய அருள்வாக்கு கேட்க மக்கள் வரத் தொடங்கினார்கள் . இப்படியே காலம் காலமாக கருப்பனுடைய அருள் வாக்கு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது . இப்போது பதின்மூன்றாவது தலைமுறையாக அருள்வாக்குச் சித்தர் டாக்டர்.க.ஆறுமுகம் சாமி அவர்கள் மூலமாக கருப்பன் வினாயகபுரத்தில் அருளாட்சி செய்து வருகிறார்கள் .
பதிமுன்று தலைமுறைக்கு முன்னாள் கருப்பன் கொடுத்த வாக்கு , கொடுத்த வரம் இன்றளவும் தலைமுறை தலைமுறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது